100 நாள் வேலைக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்: அனைத்து ஒன்றியங்களிலும் 1,170 இடங்களில் நடந்தது

2 days ago 4

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.4,034 கோடி நிதியை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்கள் என 1,170 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 9ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயம் திமுக அலுவலகத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும். அத்துடன் ‘ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைக்கிணங்க, “ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து கடந்த 25ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எவ்வித பதிலையும் தராமலும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக சார்பில் 29ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து திமுக ஒன்றியங்களிலும் தலா 2 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரை திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 1,170 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோர் மற்றும் திமுகவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள், பதாகைகளை ஏந்தி, ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு நிலுவையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கண்டன உரையாற்றினர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தாமல், திம்மசமுத்திரம் ஊராட்சிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமை தாங்கினார். இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் பேசுகையில், ‘100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு மெத்தனமாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது’ என்றார். இதில், ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ராம்பிரசாத், பாலாஜி, மோகனா இளஞ்செழியன், வளர்மதி, ரமேஷ், திமுக நிர்வாகிகள் பி.எம்.நீலகண்டன், மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவேந்திரன், அம்பிகா, சண்முகம், மகாலட்சுமி, திலகவதி, பொன்னா (எ) வெங்கடேசன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு தலைமை தாங்கினார். இதில், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி, குஜராத் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி மக்கள் கலந்துகொண்டனர்.

திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் தலைமை தாங்கினார். மாம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்குமார் தலைமை தாங்கினார். திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தண்டலம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமை தாங்கினார். முள்ளிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் திருமலை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டங்களில் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சத்யா சேகர், மாவட்ட கவுன்சிலர்கள் காயத்ரி அன்புச்செழியன், ஜெயச்சந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் ராஜாராம், மயில் வாகனன், ரமேஷ், கருணாகரன், ஏகாம்பரம், விஜயகுமார், ரவிக்குமார், மதுரவேல், சிவக்குமார், ஊராட்சி தலைவர்கள் ஆறுமுகம், தாரா சுதாகர், சோபனா தங்கம், வள்ளி எட்டியப்பன், ராணி எல்லப்பன், சங்கீதா மயில் வாகனன், கௌதமி ஆறுமுகம், தனசேகரன், பொன்னுரங்கம், ரமணி சீமான், விஜி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், குன்றத்தூர் வடக்கு ஒன்றியத்தில் டி.ஆர்.பாலு எம்பி, ஏ.வந்தே மாதரம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோல் புனிததோமையர்மலை வடக்கு ஒன்றியத்தில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் ஜி.கே.ரவி தலைமையிலும், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் மாவட்ட துணை செயலாளர் து.மூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன் தலைமையிலும், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் வெ.விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு தலைமையிலும், குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், ஒன்றிய அவைத்தலைவர் மு.சுப்பிரமணி ஆகியோர் தலைமையிலும், திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி.அன்புசெழியன் தலைமையிலும் நடந்தது.

திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், ஒன்றிய அவைத்தலைவர் இ.திருமலை தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றிய அவைத்தலைவர் ஜெ.சிவபாதம் தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ந.கோபால், ஒன்றிய அவைத்தலைவர் இ.மோகனன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 100 நாள் வேலைக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்: அனைத்து ஒன்றியங்களிலும் 1,170 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Read Entire Article