பட்டிவீரன்பட்டி, ஜன. 17: பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை 3ம் தேதி வாழைப்பழம் சூறை விடும் திருவிழா நடைபெறும். இங்கு பக்தர்கள் விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், வேண்டுதல் நிறைவேறவும் என வேண்டி கொண்டு இத்திருவிழாவில் வாழைப்பழங்களை சூறை விடுவர்.
இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஊரின் எல்லையில் உள்ள காவல் தெய்வமாக வணங்கப்படும் ரெங்கம்மாள் கோயிலில் பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்கள் நிரப்பப்பட்டு, அதற்கு மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம், வானவேடிக்கைகள் முழங்க ஆண்கள் மட்டுமே தலையில் வைத்து வாழைப்பழ பாத்திரங்களை சுமந்து வந்து மண்டு கோயிலில் வைத்து பூஜை செய்தனர். பின்னர் வாழைப்பழ பாத்திரங்களை பெருமாள் கோயிலின் உள்ளே கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்து வாழைப்பழங்களை சூறைவிட்டனர்.
கீழே விழுந்த வாழைப்பழங்களை பெருமாளின் பிரசாதமாக நினைத்து பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர்.
The post பட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழம் சூறைவிடும் திருவிழா appeared first on Dinakaran.