பட்டிவீரன்பட்டி, ஜன. 5: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள கதிர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (48) பால் வியாபாரி. இவரது மனைவி பாண்டீஸ்வரி (41) மற்றும் 11 வயதில் மகள், 7 வயதில் மகன் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டீஸ்வரி பிள்ளைகளுடன் கடந்த ஒரு வருடமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிச.29ம் தேதி செந்தில்குமார் தனது வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள கலையரசியை மது போதையில் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கலையரசிக்கும், செந்தில்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கலையரசிக்கு ஆதரவாக வந்த அவரது கணவர் மாயாண்டி, மகன் வேல்முருகன், உறவினர் ராஜ்குமார் ஆகியோர் செந்தில்குமாரை கம்பி, கற்களை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மாயாண்டி (69), இவரது மனைவி கலையரசி (61), மகன் வேல்முருகன் (34), உறவினர் ராஜ்குமார் (37) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பட்டிவீரன்பட்டி அருகே பால் வியாபாரி கொலையில் தம்பதி, மகன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.