பட்டியல், பழங்குடி மக்கள் மேம்பாட்டு திட்டத்தில் தமிழகத்துக்கான ₹184 கோடி நிதி 3 ஆண்டாக ஒன்றிய அரசு பாக்கி: முடங்கிக் கிடக்கும் ‘பிஎம்ஏஜிஒய்’ பணிகள்

3 months ago 7

மதுரை: பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா (பிஎம்ஏஜிஒய்) திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ₹184 கோடி நிதி பாக்கி வைத்திருப்பதால், தமிழ்நாட்டில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கான மேம்பாட்டு பணிகள் முடங்கிக் கிடக்கும் அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் அம்பலமாகி உள்ளது.

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கோரியபடி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் தகவல் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அதிகாரி தீபக் குமார் சாஹ் வழங்கியுள்ள தகவலில், ஒன்றிய அமைச்சகம் தமிழகத்திற்கு பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா (பிஎம்ஏஜிஒய்) திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக ₹184 கோடியே 23 லட்சம் நிதி பாக்கியை ஒன்றிய அரசு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்றிய அரசால் 2009-10 நிதியாண்டில் இந்த பிஎம்ஏஜிஒய் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம், அதிக விகிதத்தைக் கொண்ட பட்டியல் வகுப்பை சார்ந்த கிராமங்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாக கொண்டது.

இதன் ஒரு அங்கமாக பழங்குடியின மக்களுக்கென்று பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்பட்டது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் குறைந்தபட்சத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட போதுமான அடிப்படை மற்றும் நிறுவன உள்கட்டமைப்பைக் கொண்ட ஆதர்ஷ் கிராம் (மாதிரி கிராமம்) ஒன்றை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முற்போக்கு மற்றும் ஆற்றல் மிக்க கிராமம் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் இணக்கமாக வாழ்வதற்கும், தங்கள் திறனை பயன்படுத்திக் கொள்ளவும் என தேவையான அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பதனை முக்கிய அம்சமாக கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, நிதி ஒதுக்கீடு இல்லாமல் திட்டம் முடங்கியிருப்பது, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுப் பணிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதுகுறித்து மதுரை சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் கூறும்போது, ‘‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்குரிய நிதியை முழுமையாக, விரைவாக வழங்குவது அவசியம். பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா (பிஎம்ஏஜிஒய்) திட்டத்தில் ரூ.184 கோடிகள் நிதி பாக்கி 3 ஆண்டுகளாக இருக்கிறது. இதனை தமிழ்நாட்டிற்கு உடனடியாக ஒன்றிய அரசு விடுவித்து, அந்த சமூகத்தினருக்கு மேம்பாட்டு பணிகள் விரைவாகக் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

The post பட்டியல், பழங்குடி மக்கள் மேம்பாட்டு திட்டத்தில் தமிழகத்துக்கான ₹184 கோடி நிதி 3 ஆண்டாக ஒன்றிய அரசு பாக்கி: முடங்கிக் கிடக்கும் ‘பிஎம்ஏஜிஒய்’ பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article