பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

3 hours ago 2

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் (I.இறப்புச் சான்று, II.வாரிசு சான்று, III.மேற்கண்ட வாரிசுகளில் எவரேனும் இறந்திருப்பின் அவரது இறப்புச்சான்று மற்றும் வாரிசு சான்று, IV.பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்கச் சான்றிதழ், V.பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை/ தான செட்டில்மென்ட்/உயில் சாசன ஆவண நகல், VI.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் கோரப்படின் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பு நகல்) இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேற்சொன்ன விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Read Entire Article