
சண்டிகர்,
சிரோமணி அகாலி தளம் பஞ்சாபில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாப் சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர்.
இதனிடையே, அகாலி தளம் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான். இவர் இன்று அமிர்தசரசில் உள்ள சஹர்தா என்ற பகுதிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க காலை வந்தார். குருத்வாரா மதவழிபாட்டுத்தலம் அருகே சாலையில் நடந்து வந்த ஹர்ஜிந்தர் சிங்கை பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் இடைமறித்தனர். அப்போது, மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் ஹர்ஜிந்தர் சிங்கை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜிந்தர் சிங்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்ஜிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அதேவேளை, ஹர்ஜிந்தர் சிங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பலை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்குமுன் ஹர்ஜிந்தர் சிங்கின் வீட்டை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் கவுன்சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.