பட்டாசு ஆலை வெடித்து பெண் பலி: 6 பேர் படுகாயம்

3 months ago 11

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வச்சக்காரப்பட்டி, சின்னவாடி கிராமத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 30 அறைகள் உள்ளன. நேற்று பிற்பகல் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு அறையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து வெடிகள் வெடித்து கொண்டிருந்ததால் ஒரு மணிநேரம் கழித்து தான் ஆலைக்குள் தீயணைப்பு வீரர்கள் செல்ல முடிந்தது.

இதன்பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இதில் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன. வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி (50) உடல் கருகி உயிரிழந்தார். வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி, முருகேஸ்வரி (55), மாணிக்கம் (54), சைமன் டேனியல் (33) ஆகிய 6 பேர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆலை உரிமையாளர் மோகன்ராஜ், போர்மேன் செல்வக்குமார் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘ஆலையில் நேற்று காலை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று பிரிவாக பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்தனர். இதில் இரண்டு பிரிவினர் மதியம் அறைகளுக்கு முன் இருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போதுதான் வெடி விபத்து நடந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த டிபன் பாக்ஸ், மொபைல் போன்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டோம். மரத்தடியில் தொழிலாளர்கள் இருந்ததால் பெரியளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை’’ என்றனர்.

* உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டை வட்டம், வதுவார்பட்டியைச் சேர்ந்த ராமலட்சுமி (50) என்பவர் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 6 பேருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

The post பட்டாசு ஆலை வெடித்து பெண் பலி: 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article