சென்னை: “இந்த பட்ஜெட்டிலும் தமிழகத்துக்கான ரயில்வே வளர்ச்சி திட்டங்கள், நெடுஞ்சாலைகள், மதுரை, கோவை மெட்ரோ திட்டம் போன்ற அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து பாஜக-வினால் புறக்கணிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பட்ஜெட்டிலும் தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது,” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய நிதிமையச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி வெறும் வார்த்தை விளையாட்டுக்களைத் தான் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நான்கில் மூன்று இந்தியருக்கு மாத வருமானம் ரூ. 15 ஆயிரம் கூட இல்லாத நிலையில், அதிகரித்து வரும் சுகாதார, கல்வி மற்றும் அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாமல் ஏழை, எளியக் குடும்பங்கள் திணறி வருகின்றனர். இந்த சூழலில் ஏழை, எளிய மக்களின் நலன்களை மையமாக கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புக்கள் எதையும் நிர்மலா சீத்தாராமன் வெளியிடவில்லை.