கோவை: திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி பிப்.4-ல் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் கோவையில் இன்று (பிப்.1) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோவையில் இன்று (பிப்.01) செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்மைக் காலமாக திருப்பரங்குன்றம் முருகன் மலையை, சிக்கந்தர் மலை என உரிமை கொண்டாடி பிரச்சினைகள் ஏற்பட்டன. ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, பிரியாணி கொண்டு சென்று சாப்பிட்டு, மலையின் புனிதத்தை கெடுத்தார். எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்துக்களுக்கு மிகப்பெரிய அநீதி நடக்கிறது என்பது பக்தர்களுக்கு புரிந்தது. எனவே தான், திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பக்தர்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது.