
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நட்சத்திரங்களில் ஒருவர் விஷ்வக் சென். தற்போது இவர் 'லைலா' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அகன்ஷா ஷர்மா நடித்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பேர்போன விஷ்வக் சென் இப்படத்தில் ஆண், பெண் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ராம் நாராயண் இயக்க ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரித்த இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி வெளியானது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், படம் தோல்வியடைந்ததற்கு நடிகர் விஷ்வக் சென் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் வெளியான என்னுடைய படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனது கடைசிப் படம் லைலாவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, அதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இதனால், எனது நலம் விரும்பிகளிடமும், ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது எண்ணம் எப்போதுமே உங்களிடம் புதிதாக ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.
நான் ஒரு மோசமான படத்தை கொடுத்தால் என்னை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு, ஏனென்றால் எனக்கு அன்புடன் ஆதரவாக நின்றவர்கள் நீங்கள்தான். உங்கள் கருத்துகள் அனைத்துக்கும் நன்றி. நான் ஒரு நல்ல படத்துடன் விரைவில் திரும்புவேன்' என்றார்.