
முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 67 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 62 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், வார்னேவின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி பெற்ற 32-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள்:
சஞ்சு சாம்சன் - 32 வெற்றி * (62 போட்டிகள்)
ஷேன் வார்னே - 31 வெற்றி (55 போட்டிகள்)
ராகுல் டிராவிட் - 18 வெற்றி (34 போட்டிகள்)
ஸ்டீவ் ஸ்மித் - 15 வெற்றி (27 போட்டிகள்)
அஜிங்யா ரஹானே - 9 வெற்றி (24 போட்டிகள்)