கோவை கனமழை நீடிப்பால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

4 hours ago 2

வடவள்ளி,

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சிமலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.

இதன்காரணமாக கோவை வழியாக செல்லும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.நொய்யலாற்று வழித்தடப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இதற்கிடையே கோவையின் முக்கிய நதியாகவும், விவசாயிகள் வாழ்வாதாரமாகவும் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சித்திரை சாவடி முதல் தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது.நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வறண்டு காணப்பட்ட சித்திரைசாவடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் அழகை காண சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் அந்த பகுதியில் தொண்டாமுத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை பகுதியிலும் கன மழை வெளுத்து வாங்குவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.இதன்காரணமாக சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஆழியார் கவியருவி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Read Entire Article