பசுமைக்கு திரும்பிய முதுமலை சாலையோரங்களில் வலம் வரும் வனவிலங்குகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

1 month ago 5

ஊட்டி: முதுமலையின் பெரும்பாலான பகுதிகள் பசுமைக்கு மாறி உள்ளதால் சாலையோரங்களில் யானைகள் மற்றும் விலங்குகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் மழை பெய்யாமல், பகல் நேரங்களின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவில் பனி கொட்டிவிடும். இதனால், அனைத்து செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து போய்விடும்.

தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் நிலவும். இச்சமயங்களில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து போய்விடும். அதேபோல், நீரோடைகள் மற்றும் ஆறுகளில் முற்றிலும் தண்ணீர் குறைந்து வறண்டு போய் காட்சியளிக்கும். இதனால், போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர்நிலைகள் தேடி செல்வது வாடிக்கை. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்து விடும். இச்சமயங்களில், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு எந்த ஒரு விலங்கும் தென்படாது.

இதனால், முதுமலை மற்றும் மசினகுடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கம். ஆனால், இம்முறை கடந்த மாதம் வரை நீலகிரியில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால், அனைத்து வனப்பகுதிகளும் பசுமையாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி போன்ற பகுதிகளில் வனங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே வனங்கள் காய்ந்துள்ளது. சிங்காரா மற்றும் மாயார் போன்ற பகுதிகளில் வனங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது. அதேபோல், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் காணப்படுகிறது.

இதனால், ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள், காட்டு மாடுகள், மான்கள், நீலகிரி லங்கூர் குரங்குகள், மயில் உள்ளிட்ட சில விலங்குகளும் பறவைகளும் சாலையோரத்திலேயே சுற்றித் திரிகின்றன. சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகளை வாகனங்களில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த வன விலங்குகளை கண்டு உற்சாகமடைகின்றனர்.

The post பசுமைக்கு திரும்பிய முதுமலை சாலையோரங்களில் வலம் வரும் வனவிலங்குகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article