சென்னை: அண்ணாசாலை பகுதியில் போதைப்பொருள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 கிராம் மெத்தம்பெட்டமின், ஓஜி கஞ்சா, ₹1.67 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை அண்ணாசாலை பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அண்ணாசாலை போலீசார் நேற்று காலை அண்ணாசாலை ஒயிட்ஸ் சாலை, சுமித் சாலை சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த 5 பேரிடம் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 23 கிராம் மெத்தம்பெட்டமின், 5.30 கிராம் ஓஜி வகையை சேர்ந்த கஞ்சா, 2.60 கிராம் போதைப்மாத்திரை இருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் 5 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, வேளச்சேரி செல்வி தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (24), தரமணி சன்னதி தெருவை சேர்ந்த பாலசந்திரன் (28), கொளத்தூர் ராம் நகர் 2வது தெருவை சேர்ந்த யுவராஜ் (25), பெரம்பூர் அன்பழகன் நகரை சேர்ந்த சுகைல் (24), அம்பத்தூர் பானுநகர் பகுதியை சேர்ந்த பிரவீன் (31) என தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் இரவு நேரங்களில் அண்ணாசாலையில் பகுதியில் மெத்தம்பெட்டமின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மெத்தம்பெட்டமின், ஓஜி வகை கஞ்சா, போதைப்மாத்திரைகள், 2 எடை மெஷின்கள், 5 செல்போன்கள் மற்றும் ₹1,67,600 ரொக்கம், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post அண்ணாசாலையில் போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது: 23 கிராம் மெத்தம்பெட்டமின், ₹1.67 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.