பங்குனி உத்திர திருவிழா: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

1 week ago 5

சென்னை,

அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள்.

குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன.

அதைபோல முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குலதெய்வம் பற்றி தெரியாத மக்கள் முருகன் கோவில்களுக்கு செல்வர். அதன்படி, பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் அதிகாலையில் இருந்தே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பழனி:-

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்து அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வருகை எதிரொலியாக பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்:-

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதிகாலை முதலே குவிந்த திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம்:-

ராமநாதபுரத்தில் பழமைவாய்ந்த வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்களை இஸ்லாமிய நபர் ஒருவர் சாம்பிராணி புகை போட்டு வரவேற்ற சம்பவம் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

சென்னிமலை:-

கந்த சஷ்டி அரங்கேற்றம் செய்த சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜ வீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக தேரை இழுத்து குமரன் சதுக்கத்தில் நிறுத்துகிறார்கள். மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது.

இதைபோல திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. மேலும் சாஸ்தா கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா வைபவம் நடைபெற்று வருகிறது.

 

Read Entire Article