
கரூர் மாவட்டம் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், இரவு 11 மணிக்கு மேல் செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
11-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு மேல் தேர் ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது . நேற்று காலை 7.30 மணிக்கு மேல் அம்மன் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் மாவிளக்குகளை கொண்டு வந்து அம்மன் முன்வைத்து மாவிளக்கு பூஜை செய்தனர். இரவு 10 மணியளவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து அம்மன் முன் பொங்கலிட்டு படையல் போட்டு பூஜை செய்தனர்.
இதில் 18 பட்டி கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 11.30 மணியளவில் பூர்வீக தானம் கொடுத்தல் நிகழ்ச்சியும், தேர் நிலை பெயர்த்தல், குழி வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணி அளவில் அம்மன் வண்டிக்கால் பார்த்து வருதல் நிகழ்ச்சியும், காலை 6:00 மணியளவில் அம்மன் ஆற்றுக்கு சென்று நீராடி வருதல் நிகழ்ச்சியும், காலை 10 மணி அளவில் காப்பு அவிழ்த்தால் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 11 மணியளவில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.