நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..? பஞ்சாப்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

1 day ago 2

முல்லாப்பூர்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதன்படி லீக் சுற்றுகள் நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 19 புள்ளிகள் பெற்று பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை தனதாக்கி 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றியை பதிவு செய்திருந்தது.

பஞ்சாப் அணியில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டத்தை தவறவிட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திரா சாஹல் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகுவதற்காக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சென் தாயகம் திரும்பி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

பெங்களூரு அணி 

பெங்களூரு அணி லீக்கில் 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது) என 19 புள்ளிகள் பெற்றாலும், ரன்-ரேட்டில் பஞ்சாப்பை விட பின்தங்கியதால் 2-வது இடத்தை பிடித்து 10-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

முந்தைய லீக் ஆட்டத்தில் (லக்னோவுக்கு எதிராக) 228 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்திய உற்சாகத்துடன் பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

பெங்களூரு அணியில் லுங்கி இங்கிடி (தென்ஆப்பிரிக்கா) விலகினாலும், தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவற விட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (10 ஆட்டங்களில் 18 விக்கெட்) திரும்புவது பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. அதில் பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், முல்லாப்பூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

வெளியூர் ஆட்டங்களில் கலக்கி வரும் பெங்களூரு அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து 4-வது முறையாக இறுதிப்போட்டியை எட்ட வரிந்து கட்டும். அதேநேரத்தில் பஞ்சாப் அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 18 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், கைல் ஜாமிசன், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, குருணல் பாண்ட்யா, லியாம் லிவிங்ஸ்டன், ரொமாரியோ ஷெப்பர்டு, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

Read Entire Article