![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38020146-chennai-03.webp)
நெல்லை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லைக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். மேலும் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை திறந்து வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.9 ஆயிரத்து 372 கோடி செலவில் ஏற்கனவே முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைக்கிறார்.
இதில் நீர்வளத்துறை சார்பில் ரூ.1,061 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் திட்டம், கங்கைகொண்டானில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.77 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்கா, ரூ.19.25 கோடியில் மானூர் யூனியனில் 22 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம், ரூ.85.63 கோடியில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 768 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 24 முடிவடைந்த திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை நெல்லைக்கு வருகை தந்தபோது அறிவித்த நெல்லை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில், கொங்கந்தான்பாறை முதல் சுத்தமல்லி வரை ரூ.180 கோடியில் தொகுதி-1 திட்டம் உள்ளிட்ட 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இந்த புதிய திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,679.75 கோடி ஆகும்.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 45 ஆயிரத்து 485 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட ரூ.167 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் நகர நிலவரித்திட்ட பட்டாக்கள், வீட்டு வசதிவாரிய பட்டாக்கள என நீண்டகாலமாக நிலுவையில் உளள 29,999 பேருக்கு பட்டாக்கள் என மொத்தம் 75,151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.