![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38041868-untitled-1.webp)
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் புதிய ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி திறந்து வைக்கிறார்.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை நிறுவியுள்ள இந்நிறுவனம். மேம்பட்ட உற்பத்தி மையத்தின் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக்கொண்டு திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள். தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது. இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும். மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசிற்கும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானது.