
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் முண்டந்துறை வனச்சரகத்துக்கு உட்பட்ட வட்டப்பாறை வனக்காவல் பழைய தோட்ட பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டையில் ஒரு யானை இறந்திருக்கலாம். இறந்த யானையின் இடதுபக்க முன்னங்காலின் கீழ்பகுதியில் மற்றொரு யானை அதன் தந்தத்தால் தாக்கியதால் இதயம் மற்றும் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மனோகரன், அர்னால்ட் வினோத் தலைமையிலான குழுவினர், இறந்த யானையை பரிசோதனை செய்த பின்னர் அப்பகுதியில் புதைத்தனர்