நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு - மேலும் ஒருவர் கைது

1 day ago 2

நெல்லை மாவட்டம் டவுண் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன். முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஜாகீர் உசைனை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

முன்னதாக ஜாகீர் உசைன் வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக, சில நாட்களுக்கு முன்பு ஜாகீர் உசைன் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருண்ணிசா ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் முகமது தவுபிக் நெல்லை ரெட்டியார்பட்டியில் பதுங்கி இருந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் அவரை பிடித்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது என்பவரிடம் நேற்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கொலைக்கு உதவியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நூருண்ணிசாவை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

Read Entire Article