பந்தை சேதப்படுத்தினார்களா சென்னை அணி வீரர்கள்..? வைரலாகும் சர்ச்சை வீடியோ

4 days ago 3

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இது முதல் ஆட்டமாகும். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், கெய்க்வாட் 53 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கலீல் அகமது பந்து வீச தயாராகும் முன் தனது பாக்கெட்டிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து ருதுராஜ் கையில் கொடுப்பது போலவும், அதனை கெய்க்வாட் தனது பாக்கெட்டில் மறைத்து வைப்பது போலவும் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அது என்ன பொருள் என்பது தெளிவாக தெரியவில்லை.

இதனை வைத்து சில ரசிகர்கள் சென்னை அணியினர் பந்தை சேதப்படுத்தியுள்ளனர் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் இது குறித்து பி.சி.சி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் கலீல் அகமது வீசியது புதிய பந்துதான். அதனை சேதப்படுத்தியும் எந்த பலனும் இல்லை. அது இயல்பாகவே நல்ல கிரிப்புடன் இருக்கும். எனவே சென்னை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தவில்லை என்று ஒரு தரப்பு ரசிகர்கள் காரணத்துடன் விளக்கி வருகின்றனர்.  

Read Entire Article