
நெல்லை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கி, வருகிற மார்ச் 1-ந்தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதில் பாபநாசம், முண்டந்துறை, கடையம், அம்பை போன்ற வனச்சரகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்ப்பட்ட வனவர்கள், வன பாதுகாவலர்கள், வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள், கலந்து கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் செயலி மூலமாக புலிகளின் கால்தடம், எச்சம், வனப்பகுதியினுள் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ள பதிவுகள் போன்றவற்றை வைத்து புலிகளை கணக்கெடுக்கின்றனர். நேற்றைய கணக்கெடுப்பின்போது புலியின் எச்சம் மற்றும் அது வேட்டையாடிய மிருகத்தின் பற்கள் போன்றவை கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகிற மார்ச் 2-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட வன சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.