
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி, கூனியூர், முதல் தெருவை சேர்ந்த பாண்டியன் (வயது 33) சென்னையில் பணிபுரிந்து வருவதால் குடும்பத்துடன் அங்கே குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 5.1.2024 அன்று சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது சொந்த ஊரான கூனியூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து பயன்படுத்திவிட்டு அவசர வேலை காரணமாக கிளம்பும்போது நகைகளை வீட்டின் பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டின் சாவியை வீட்டை பராமரிப்பதற்காக தனது அக்காவின் கணவரான கூனியூர், மேல வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன்(எ) ரமேஷ் (41) என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
பின்பு 10.6.2024 அன்று பாண்டியன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. மேலும் இதைப்பற்றி ராமகிருஷ்ணனிடம் பாண்டியன் கேட்டபோது, தான் எடுத்து அடகு வைத்து விட்டதாகவும் திருப்பி தந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை ராமகிருஷ்ணன்(எ) ரமேஷ் நகைகளை திருப்பித் தராமல் இருந்து வநதுள்ளார். இதுகுறித்து பாண்டியன் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராமகிருஷ்ணன்(எ) ரமேஷை நேற்று (12.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.