
ரியாத்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும்.
பயணத்தின் முதல் நாடாக டிரம்ப் இன்று சவுதி அரேபியா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ரியாத் சென்ற டிரம்பை சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
அதன்பின் டொனால்டு டிரம்பும், முகமதுபின் சல்மானும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டொனால்டு டிரம்ப் மற்றும் முகமது பின் சல்மான் இடையே கையெழுத்து ஆகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாட்டுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.