பறக்கும் அரண்மனையை வேண்டாம் என கூற நான் என்ன முட்டாளா...? டிரம்ப் ஆவேசம்

3 hours ago 3

நியூயார்க்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவருடைய இந்த பயணத்தில் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். இந்நிலையில், கத்தாரின் அரச குடும்பம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, போயிங் 747-8 என்ற பெரிய ஆடம்பர ரக விமானம் ஒன்றை பரிசாக அளிக்க திட்டமிட்டு உள்ளது. டிரம்பும் இதனை ஏற்க முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி ஏ.பி.சி. நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சியில் இருக்கும் வரை இதனை பயன்படுத்த டிரம்ப் முடிவு செய்திருக்கிறார். அதன்பின்னர், ஜனாதிபதி நூலக அறக்கட்டளைக்கு இந்த விமானம் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், விமர்சகர்களும், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களும், பட்டப்பகலில் இது ஒரு வகையில் லஞ்சம் என கூறுகின்றனர்.

விமானத்திற்குள் உள்ள வசதி

 

இந்த பரிசை டிரம்ப் பெறுவதில் ஏதேனும் சட்ட சிக்கல் உண்டா? என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், அரசர், இளவரசர் அல்லது வெளிநாட்டிடம் இருந்து அமெரிக்க அரசு அதிகாரி பரிசுகளை ஏற்று கொள்வதில், லஞ்சத்திற்கு நிகரான விதிமீறல்கள் எதுவும் கிடையாது என்றும் அரசியலமைப்பு அதனை தடை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது டிரம்புக்கான பரிசு அல்ல. அமெரிக்காவின் விமான படைக்காக கொடுக்கப்பட்டது. இதன்பின்னர், ஜனாதிபதி நூலக அறக்கட்டளைக்கு இந்த விமானம் கொண்டு செல்லப்பட உள்ளது என அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்தது. இந்த விமானம், பறக்கும் அரண்மனை என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அதில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

விமானத்தில் ஆடம்பர வசதி கொண்ட படுக்கையறை, ஓய்வறை, கூட்டம் நடைபெறும் அறை, பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட குளியலறைகள் மற்றும் ஒரு பெரிய படிக்கட்டு ஆகியவை உள்ளன. டிரம்புக்காக விமானத்தில் தேவையான சில மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. இந்த விமானத்தின் மதிப்பு ரூ.3,413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

கத்தார் அரசு பரிசாக வழங்கும் இந்த ஆடம்பர ரக விமானம் பற்றி ஜனநாயக கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதுபற்றி டிரம்பிடம் நிருபர்கள் குறிப்பிட்டதுடன், பதிலுக்கு கத்தார் ஏதேனும் கேட்டார்களா? என்றும் கேட்டனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், இந்த கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும்.

கத்தாரின் ஒரு பெரிய செயல் என்றே நான் நினைக்கிறேன். இதனை வெகுவாக பாராட்டுகிறேன் என்றார். இதுபோன்ற சலுகையை வேண்டாம் என கூறும் நபராக நான் ஒருபோதும் இருக்கமாட்டேன். இந்த இலவச மற்றும் மிக விலையுயர்ந்த விமானத்தின் மீது எங்களுக்கு விருப்பமில்லை என கூறினால் நான் ஒரு முட்டாளாக இருக்க கூடும். ஆனால், அவர்களின் ஓர் உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடு என்றே இதனை நான் நினைத்தேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், ஏனெனில், நாங்கள் உதவுகிறோம். உதவியிருக்கிறோம். அது தொடரும். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு தொடர்ந்து நாங்கள் உதவுவோம் என டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், இந்த ஆடம்பர ரக விமானம் அமெரிக்காவின் விமான படையின் பாதுகாப்புக்கு ஈடாக இருக்குமா? என்பது தெரிய வரவில்லை. எனினும், அணு ஆயுத தாக்குதலை எதிர்க்கும், ஏவுகணை தடுப்பு நடவடிக்கைகள், வானிலேயே எரிபொருள் நிரப்பும் திறன் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையாக அதில் சில அம்சங்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

Read Entire Article