நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை 2026 தேர்தலில் அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும். இரு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் அதிமுக கட்சி விடும் என நெல்லை அதிமுக தொண்டர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகள் அடங்கும். இதில் பாளையங்கோட்டை, ராதாபுரம் தொகுதிகளில் கடந்த 2021 தேர்தலில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றது. அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுகவும், நெல்லை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவும் வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் இன்னும் ஓராண்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை அதிமுக தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற வெறுப்பே நிலவுகிறது. ஏனெனில் பாஜகவுடன் கூட்டணி இருந்தால் சிறுபான்மையினரான ஓட்டுக்களை அதிமுக இழந்து விடும். இதன் மூலம் அரசியல் அரங்கில் அதிமுக ஓரங்கட்டப்பட்டு விடும் என அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையில், ‘நெல்லை மாவட்ட உண்மையான அதிமுக தொண்டர்கள்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதியுள்ளதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக கோட்டை ஆகும். இந்த தொகுதிகளில் 2001ம் ஆண்டு முதல் இன்று வரை அதிமுக வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து 5 முறை போட்டியிட்டு, இரண்டு முறை படுதோல்வி அடைந்து அதிமுக தொண்டர்களின் உழைப்பில் ஆதரவில் வாக்குகளை பெற்று மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் கட்சி வளர்ச்சிக்கு தொண்டர்கள், பொதுமக்கள், நலன்களுக்கு, மாவட்ட வளர்ச்சிக்கு எந்தவொரு பணியும் செய்யவில்லை. அதிமுக கட்சி அழிவுப் பாதையில் இருந்து வருகிறது.
எனவே நெல்லை மாநகர் மாவட்டத்தில் பொதுமக்களின், அதிமுக தொண்டர்கள், கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடப்பாடி பிறந்த நாளில், மிக கவனமாக பரிசீலனை செய்து நெல்லை, பாளை. சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை 2026 சட்டமன்ற தேர்தலில் நிறுத்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற ஆவன செய்ய வேண்டுகிறோம். இரண்டு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் நெல்லை, பாளை. சட்டமன்ற தொகுதியில் அதிமுக கட்சியும் அழிந்து அதிமுக நெல்லையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் பெயரை கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், அவரை குறிவைத்து எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post நெல்லையில் அதிமுக அழிந்துவிடும்: எடப்பாடிக்கு தொண்டர்கள் பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.