வேலைக்கு செல்வதாக ஏமாற்றிவிட்டு ஓடிய மனைவி வேறொருவருடன் திருமணம்: தாலிகட்டும் வீடியோவை இன்ஸ்டாவில் பார்த்து கதறிய கணவர்

4 hours ago 2

நாகர்கோவில்: குமரி அருகே வேலைக்கு செல்வதாக ஏமாற்றிவிட்டு ஓடிய மனைவி வேறொரு நபருடன் ரகசிய திருமணம் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், அதனை கண்ட கணவர் அதிர்ச்சியடைந்து கதறினார். தன் மனைவியை மீட்டு தருமாறு அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் அஜித்குமார். கொத்தனார். இவருக்கும் குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சேர்ந்த அபிஷா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் குலசேகரத்தில் உள்ள அபிஷாவின் வீட்டிலேயே வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. இதற்கிடையே அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியில் சேர்ந்தார். அபிஷா சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து பணிபுரிவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை தனக்கு மருத்துவமனையில் தங்கியிருந்து வேலை இருப்பதாக கூறிவிட்டு அபிஷா புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் 6ம் தேதி அஜித் குமார் தனது மனைவி அபிஷாவின் செல்போனை தொடர்புகொண்டார். ஆனால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மருத்துவமனை நிர்வாகத்துக்கு தொடர்புகொண்டார். அப்போது அவர்கள் கூறுகையில், சார் உங்க மனைவி, திடீரென நேற்று உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி லீவு கேட்டார். தன்னை அழைத்து செல்ல உறவினர் ஒருவர் வருவார் எனக்கூறினார். அவர் கூறியபடி உறவுக்காரன் எனக்கூறி 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்தான். அவனுடன் உங்கள் மனைவி பைக்கில் ஏறி சென்றுவிட்டார் என்றனர்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஜித்குமார் அப்படி யாருக்கும் உடல்நிலை சரியில்லையே என குழம்பினார். இதையடுத்து அவர் கடந்த 7ம் தேதி அருமனை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷாவை தேடி வந்தனர்.

இதற்கிடையே நண்பர் ஒருவர் அஜித் குமாரை தொடர்புகொண்டு பேசினார். அவர் கூறுகையில், நண்பா உனக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டதா? என்றார். அதற்கு அஜித் குமார் மறுத்தார். மேலும் நண்பா உனக்கும், உன் மனைவிக்கும் ஏதேனும் பிரச்னையா? பிரிந்து வாழ்கிறீர்களா? என்றார். இதனால் குழப்பமடைந்த அஜித் குமார் நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்கிறோம் நாங்கள் ஏன் பிரியப் போகிறோம். ஆனால் என் மனைவியை காணவில்லை.அவர் எங்கு சென்றார் என தேடிக்கொண்டிருக்கிறோம் என அஜித் குமார் கூறினார்.

இதையடுத்து அந்த நண்பர், நண்பா பதற்றப்படாதே. இப்போது உன் இன்ஸ்டாகிராமுக்கு ஒரு வீடியோ அனுப்புகிறேன். அதை பார்த்தால் உனக்கு எல்லாம் புரியும் என்று ஒரு வீடியோவை அனுப்பினார். அந்த வீடியோவை பார்த்த அஜித் குமார் நிலைகுலைந்து போனார். அதாவது தனது ஆசை மனைவி அபிஷா வேறு நபருடன் கோயிலில் வைத்து மாலையும் கழுத்துமாக திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் அதில் இருந்தது. வீடியோவை பார்த்து கதறி அழுத அஜித்குமார் உடனே அருமனை காவல் நிலையத்துக்கு சென்றார்.

பின்னர் தனது மனைவி அபிஷா மாயமானது குறித்தும், தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்த வீடியோவை காண்பித்தும் புகார் அளித்தார். அவர் போலீசாரிடம் கூறுகையில், திருமணம் நடந்த நாளில் இருந்து எந்தவித பிரச்னையும் இன்றி நன்றாக குடும்பம் நடத்தி வந்தோம். மனைவி அபிஷாவும் என் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார். ஆனால் தற்போது அவர் வேறொருவரை திருமணம் செய்துகொண்ட வீடியோவை பார்த்து நம்ப முடியவில்லை. எனவே எனது மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீசாரிடம் கூறி அழுதார். இதன்பேரில் தற்போது அபிஷா எங்கு உள்ளார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வேலைக்கு செல்வதாக ஏமாற்றிவிட்டு ஓடிய மனைவி வேறொருவருடன் திருமணம்: தாலிகட்டும் வீடியோவை இன்ஸ்டாவில் பார்த்து கதறிய கணவர் appeared first on Dinakaran.

Read Entire Article