நெல்லை: நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.309 கோடியிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
நெல்லையின் பெருமையை சுட்டிக் காட்டி முதல்வர் உரை;
எந்த ஆட்சியாக இருந்தாலும் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. 17 ஆண்டுகள் வெள்ளையருக்கு எதிராக படை நடத்திய பாளையக்காரர்தான் பூலித்தேவன். பூலித்தேவனுக்கு நெல்கட்டும் செவலில் நினைவுச் சின்னம் அமைத்தவர் கலைஞர். பாண்டியர், சோழர், விஜயநகர, ஆங்கிலேய ஆட்சியாக இருந்தாலும் நெல்லை மிக முக்கிய நகரமாக விளங்கியது. நெல்லையப்பர் கோவிலில் பூட்டிக் கிடந்த மேற்கு, தெற்கு வாசல் திமுக ஆட்சியில்தான் திறக்கப்பட்டது. நெல்லையில் 1973-ல் ஈரடுக்கு பாலம் அமைத்து திருவள்ளுவர் பாலம் என்று பெயர் சூட்டியவர் கலைஞர். தமிழரின் வரலாற்று பெருமைக்கு நெல்லை மண்தான் அடையாளம். தமிழரின் பெருமையை நிலைநாட்டி வரும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. தமிழ்நாட்டில் நகர நாகரிகம், எழுத்தறிவும் கிமு6-ம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது என்று கீழடி அகழாய்வில் உறுதியாகியுள்ளது.
ரூ.33 கோடி செலவில் பொருநை அருங்காட்சிய பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துக்குள் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிடும். ரூ.1304 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.1,061 கோடியில் உபரிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வெள்ளி தேர் விரைவில் ஓடும். தாமிரபரணி நீர் ஆதாரத்தை கொண்டு ரூ.605 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். சோலார் ஆலைகளில் பெண்களுக்கு அதிகம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
நெல்லை மழை பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை: முதல்வர்
நெல்லையில் மழை பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. நிவாரணம் வழங்காததை கண்டித்தோம், அப்போதும் ஒன்றிய அரசு தரவில்லை. நீதிமன்றம் சென்ற பிறகுதான் ஒன்றிய அரசு ரூ.276 கோடி வழங்கியது. மழை வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு கேட்ட ரூ.37,907 கோடியில் ஒரு சதவீத நிதி கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்தியா வரைபடத்தில் மட்டும் தமிழ்நாடு இருந்தால் போதுமா?. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார். நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அவதூறு பரப்புகின்றனர்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் நம் மீது அவதூறு அள்ளி வீசுகின்றனர். மக்களுக்கு நன்மை இருந்தால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன். சமூகவலைதளங்களில் ஒவ்வொரு செய்தியையும் திரித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படி கெடுக்கலாம் என்று யோசிக்கின்றனர். உண்மையான வரலாற்றை திராவிட மாடல் அரசு தோண்டி எடுப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. திமுகவுக்கு பக்கபலமாக மக்கள் இருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நெல்லைக்கு புதிய திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*நாங்குநேரி அருகே 2291 ஏக்கர் பரப்பளவில் 2 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள்
*பாளையங்கோட்டையில் Y வடிவ ரயில்வே மேம்பாலம்,
*தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம்
*பாபநாசம் கோயில் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள்
*மேலப்பாளையத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம்
*ரூ.120 கோடி செலவில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்
நெல்லை மாவட்டத்துக்கு அறிவித்த திட்டங்களுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post நெல்லை மழை பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை.. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!! appeared first on Dinakaran.