
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியை ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாநில மகளிர் ஆணையம் மற்றும் உயர்கல்வி துறை உள்ளிட்ட துறைகளுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகார் மனுவில், அதே பல்கலைக்கழகத்தில் தாம் முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருந்த போது, பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தற்போது அதே பல்கலைக்கழகத்தில் தாம் பணியாற்றும் போது அந்த பேராசிரியர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில மகளிர் உரிமைகள் ஆணையம் மற்றும் உயர்கல்வி துறை தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த விசாரணையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என தேசிய மகளிர் உரிமைகள் ஆணையம் கூறியது. அதன் அடிப்படையில், கல்லூரி உள்விவகார குழு சார்பில் விசாரணை நடத்த துணை வேந்தர் உத்தரவு பிறப்பித்தார். பல்கலைக்கழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.