
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இன்று முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்படி இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக முன்னாள் 'ரா' தலைவர் அலோக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி ராணுவ சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளான முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் மற்றும் ரியர் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் இந்திய காவல் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு உறுப்பினர்களான ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும், முன்னாள் இந்திய வெளியுறவு சேவை (IFS) தூதர் பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோரும் 7 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.