
திசையன்விளை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.காலை 11 மணியளவில் திடீரென்று வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியதால் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
திசையன்விளை நேருஜி திடல் முதல் மன்னராஜா கோவில் வரையிலும் சாலையில் குளம்போன்று தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு சென்றன. அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்பட்ட பொதுமக்கள் மாற்றுவழியில் சுற்றி சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.