
நெல்லை டவுன் தொட்டிப்பாலத் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஜாகீர் உசேன், கடந்த 18 ஆம் தேதி பள்ளிவாசல் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது 3 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த முகமது தவ்பிக், அவரது மனைவி நூர்நிஷா, சகோதரர் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கார்த்திக், அக்பர்ஷா கோர்ட்டில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுடைய உறவினரான 16 வயது சிறுவன், இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படித்து வரும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்து விட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாணவனை போலீசார் நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.
இதனிடையே, 2 நாட்கள் காவல் முடிந்த நிலையில், கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணமூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கில் பிளஸ் -1 மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.