மீண்டும் மதுபோதையில் ரகளை: "ஜெயிலர்" வில்லன் நடிகர் கைது

4 hours ago 1

திருவனந்தபுரம்,

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகள் வாங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

எர்ணாகுளத்தில் வசித்து வரும் நடிகர் விநாயகன் சில மாதங்களுக்கு முன் அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். பின், கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைக் கடுமையாக வசைபாடினார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி விநாயகன் மீதான மதிப்பைக் கெடுத்தது. பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு நடிகர் விநாயகன் முகநூலில் பதிவிட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே பிரபல இயக்குனர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் ஜெய சூர்யா, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிந்து, நடிகர் விநாயகன் கொல்லத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். பின்னர் மாலையில், மது அருந்தி விட்டு ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அங்கு வந்த போலீசார், விநாயகனை விசாரணைக்காக கொல்லம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்திலும் அவர் பல மணி நேரம் ரகளையில் ஈடுபட்டு பிரச்சினை செய்ததால், அவரை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Read Entire Article