
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் 'கூலி' திரைப்படம் வெளியாக 100 நாட்கள் எஞ்சியிருந்த நிலையில், படத்தின் முன்னோட்ட டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத்தின் இசையில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை முகம் காட்டாமல் அடையாளப்படுத்தும் வகையில் இந்த டீசர் உருவாகியிருந்தது. 'அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டும்' என்கிற வரிகளுடன், இந்த டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் இசைதான் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டீசருக்காக அமெரிக்க ராப் பாடகர் லில் நாஸ் எக்ஸ் என்பவரின் 'இன்டஸ்ட்ரி பேபி' பாடலை, அனிருத் காப்பியடித்திருப்பதாக, சமூக வலைதளத்தில் ஆதாரத்துடன் பலரும் சொல்லி வருகின்றனர். இருந்தாலும் 'கூலி' படத்தின் அந்த டீசர் வைரலாகி விட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அனிருத் மீதான, சர்ச்சை வளர்ந்து கொண்டே செல்வது அவரது ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்துள்ளது.
இசையமைப்பாளராக அனிருத்தின் பல பாடல்கள் சர்ச்சையிலும் சிக்கி விடுகின்றன. அவர் இசையமைக்கும் பாடல்கள், மேல் நாட்டு இசையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்ற கருத்து பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான 'தேவரா' படத்தில் இடம்பெற்ற 'சுட்டாமலே..' பாடலையும், அவர் காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.