
நெல்லை மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சூசையம்மாள் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் (29.04.2025) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கணக்கன்குளத்திற்கு அருகே சந்தேகப்படும்படி ஒரு லாரி, ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த கூத்தன்குழி, சுனாமிகாலனியைச் சேர்ந்த சிலுவை அந்தோணி ஜனா (வயது 20), தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகம்மங்கலம், அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (23), சிங்கத்தாகுறிச்சி, கீழத்தெருவைச் சேர்ந்த சண்முகம் (25), மூலக்கரைப்பட்டி, தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (40), தூத்துக்குடி மாவட்டம், பூபால ராயபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் (36) மற்றும் சிலரை சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் சட்ட விரோதமாக பீடி இலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இலங்கைக்கு கடல் வழியாக கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சூசையம்மாள் மேற்சொன்ன நபர்களை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடங்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றார். இதுகுறித்து கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிலுவை அந்தோணி ஜனா, சந்தோஷ்குமார், சண்முகம், முத்துக்குமார், அந்தோணிராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 30 கிலோ எடை கொண்ட பீடி இலைகளையும், ஒரு லாரி, ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.