
சென்னை,
ஐ.பி.எல். தொடரில், நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.10-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 8-வது தோல்வியாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது.
இந்நிலையில் விக்கெட் வீழ்த்துவதில் சிறப்பாகவே செயல்படுகிறோம் என சென்னை அணி பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
"நாங்கள் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிறப்பாகவே செயல்படுகிறோம், ஆனால் எங்கள் பேட்டிங்கில் ஒரு அணியாக, கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன, மேலும் பேட்டிங்கில் ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதில் துல்லியமாக இருக்க வேண்டும். என தெரிவித்தார் .