
சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று மதுரை செல்கிறார். 14 வருடங்களுக்கு பிறகு விஜய் இன்று மதுரைக்கு செல்ல உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மதுரை வரவிருக்கும் நிலையில், மதுரை பெருக்குடியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அதிகாலை முதலே த.வெ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், கட்சி தொடங்கிய பின் விஜய் முதல் முறையாக விஜய் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மதுரை விமான நிலையத்தில் நமது நண்பர்கள், தோழர்கள், தோழிகள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மதுரை மக்களின் அன்புக்கு கோடான கோடி நன்றிகள்.
நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன். கூடிய விரைவில் மதுரைக்கு வரும்போது நமது கட்சி சார்பாக வேறொரு சந்தர்ப்பத்தில் உங்களை நான் சந்திப்பேன்.
இன்று நான் என் வேலையை பார்க்கப் போகிறேன். நீங்களும் பத்திரமாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் எனது வாகனத்திற்கு பின்னால் பின்தொடர்ந்து வர வேண்டாம்.
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் செல்லாதீர்கள். அந்த காட்சிகளை பார்க்கும்போது பதற்றமாக இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களை நான் சந்தித்து பேசுவேன்.
உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். மதுரை விமான நிலையத்தில் இந்த தகவலை என்னால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதனால் இங்கேயே உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன்."
இவ்வாறு விஜய் தெரிவித்தார்.