நெற்பயிர்களில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல்

1 month ago 9

*விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிர்களில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல் குறித்து விவசயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கான நெற்பயிர் அறுவடை பணி தொடங்க உள்ளது. நெல்லில் ஆங்காங்கே கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல் காணப்படுகின்றன. கருப்பு நாவாய் அல்லது கருப்பு சுனாமி வண்டுகள் தாக்குதல் கணிசமாக நெல்வயல்களில் தென்படுகிறது. இந்த பூச்சி பால் பிடிக்கும் தருணத்தில் தாக்கினால் நெல்மணிகள் முற்றிலுமாக பதராக மாறிவிடும். ஒரு தூறில் 10 லிருந்து 15 பூச்சிகள் வரை தென்பட்டால் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படக்கூடும்.

இந்த பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த வயலில் நன்கு நீர்பாய்ச்சி தழைச்சத்து உரத்தை சரியான அளவில் பிரித்து இடவேண்டும். அதேபோல் தாக்கப்பட்ட பயிர்களின் தாள்களை அறுவடைக்குப் பிறகு தண்ணீர் விட்டு அழுகச்செய்து அடுத்த பருவத்தில் வண்டுகளின் தாக்குதல் நிகழாதவாறு பாதுகாக்க வேண்டும். தொடர்ச்சியாக நெல் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்ததாக விளக்கு பொறிகள் வைத்து இந்த கருப்பு வண்டுகளை கட்டுப்படுத்தலாம்.

இது தவிர உயிர் பூஞ்சைக்கொல்லிகளான பிவேரியா பேசியானா அல்லது மெட்டாரஸ்யம் அணிசோபிலியே என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை குறைத்து இந்த உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பயனடையலாம் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியான முனைவர் மா. ராஜேஷ் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் து.பெரியார் ராமசாமி பரிந்துரைக்கின்றனர். இந்த உயிர் பூஞ்சைக்கொல்லிகளை தெளித்தோ அல்லது எருவுடன் கலந்து நடவுவயலில் இடலாம். இந்த பூஞ்சைகள் வண்டுகளின் மீது வளர்ந்து அந்த பூச்சியை கொன்று விடுகின்றன.

இதைத் தொடும் மற்ற பூச்சிகளும் தாக்குதலுக்கு உட்பட்டு இயற்கையிலேயே இதன் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் தாக்குதலால் 100 செடிக்கு 10 செடி பழுப்பு நிறமாகமாறியோ அல்லது தூருக்கு 5 பூச்சிகள் என்று சேதார நிலையை கடக்கும்போது ஒரு ஹெக்டருக்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் அல்லது எதேனும் ஒரு ஊடுருவும் பூச்சிகொல்லியைத்தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றனர்.

The post நெற்பயிர்களில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article