புதுடெல்லி: ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 வரை பல்வேறு பிரிவினருக்கு கணக்கீடு ஆண்டு 2025-26க்கான வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு வருமான வரியில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தனிநபர்கள் பங்கு முதலீடுகளின் மீது நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1.25 லட்சம் வரை வருமான வரி கிடையாது. அதற்கு மேல் 12.5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். இதற்கேற்ப 2025-26 கணக்கீட்டு ஆண்டுக்கு புதிதாக ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகிய படிவங்களை கடந்த ஏப்ரல் 29ம் தேதி வருமான வரித்துறை அறிமுகம் செய்தது. கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த தேவையற்ற தனிநபர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
ஐடிஆர் 1 (சகஜ்) மற்றும் ஐடிஆர் 4 ஆகிய படிவங்கள் சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கானது. மாதச்சம்பளம், ஒரு வீட்டின் மூலமான வருவாய், வட்டி உள்ளிட்ட இதர ஆதாரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை ஈட்டுவோர் இதனை தாக்கல் செய்யலாம். இதுபோல், தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை ஈட்டும் தனிநபர்கள், நிறுவனங்கள் ஐடிஆர் 4 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
மூலதன ஆதாய வரியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப ஐடிஆர் படிவங்கள் 2,3,5,6 மற்றும் 7 ஆகிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூலதன ஆதாய வரி 2024 ஜூலை 23ம் தேதிக்கு முன்பு, அல்லது பின்பு என பிரித்து குறிப்பிடவேண்டும் . இதுபோல், நிறுவனங்கள், எல்எல்பி, கூட்டுறவு சொசைட்டிகளுக்கு ஐடிஆர் 5, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு ஐடிஆர் 6, அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்களுக்கு ஐடிஆர் 7 படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
The post பல்வேறு பிரிவினருக்கான 7 வருமான வரி படிவங்கள் வெளியீடு..! appeared first on Dinakaran.