இந்திய பொருளாதாரத்தில் தமிழகத்தின் 9 சதவீத பங்களிப்பு என்பது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது. தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பங்களிப்பு செய்வதில் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.24 சதவீதமாக இருக்கும் நிலையில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.19 சதவீதமாக உள்ளது. தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை திமுக அரசு உருவாக்கி தந்ததாகவும், இதன் மூலம் நாட்டிலேயே 14வது இடத்தில் இருந்த தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளதாக நடுநிலையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள், ஒடுக்கப்பட்டோர் என அனைவரும் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்கைகளால் அவர்களது நிலை மேம்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 1,15,16,292 பெண்கள் ரூ.1,000 பெறுகிறார்கள். பேருந்து பயண திட்டத்தின் கீழ் பெண்கள் 445 கோடி முறை அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
கல்வி துறையில் தமிழகம் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 16 லட்சம் மாணவர்கள் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி, ரூ.519.73 கோடியில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு என சாதனை திட்டங்களின் பட்டியல் நீள்கிறது.
அந்த வரிசையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் `முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை கொளத்தூர் அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் முதல்வரின் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்பகத்தில் வருகின்றவர்களுக்கு படிப்பதற்கென்று ஒரு தளமும், பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு ஒரு தளமும் என 3 தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. அவர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவசமாக அனுமதிக்கப்பட்டால் பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடும் என்பதற்காக இந்த குறைந்தபட்ச கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி செய்வதற்காக கோ-ஒர்க்கிங் ஸ்டேஷன் எனப்படும் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம். மேலும், இதில் 3 கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்படுகின்றன. கலந்தாய்வு கூடங்களில் இரண்டில் தலா 4 பேரும், ஒன்றில் 6 பேரும் அமர்ந்து பணியாற்ற முடியும்.
கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படாது என்றும், பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த பணியிடத்தை பகிரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கும் குறைந்தளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. மேலும், பெண்கள் கணினி கற்பதற்காக, அனிதா பெயரில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட மையத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்துள்ளனர். மக்களுக்கான திட்டங்களை தீட்டி, மக்களுக்கான அரசாக செயல்படுகிறது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
The post நீளும் சாதனை திட்டங்கள் appeared first on Dinakaran.