ஊட்டி: நீலகிரி வனகோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 100 கிமீக்கு தீ தடுப்பு கோடு அமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி வனக்கோட்டத்தை பொறுத்த வரை குந்தா, கோரகுந்தா, ஊட்டி வடக்கு, ஊட்டி தெற்கு, பார்சன்ஸ்வேலி, குன்னூர், கோத்தகிரி, கட்டபெட்டு, பைக்காரா உள்ளிட்ட 12 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வன சரகங்களில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இதுதவிர பல்வேறு அரிய வகை மரங்கள், தாவரங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் வரை கனமழை நீடித்த நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து உறை பனி பொழிவு துவங்கியது. இதனால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புல்வெளிகள், மரங்கள் காய்ந்து காட்டு தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உறை பனி பொழிவு கடுமையாக உள்ளது. பகலில் கடும் வெயில் உள்ளது. இதனால் புற்கள், செடி கொடிகள் காய்ந்து காட்டு தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், காட்டு தீ ஏற்படாத வண்ணம் நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக வனத்தின் அருகில் அமைந்துள்ள கிராம பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 12 வனச்சரகங்களிலும் தலா 5 பேர் வீதம் 60 தற்காலிக தீ தடுப்பு காவலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். 100 கிமீ தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட வன அலுவலகத்தில் கட்டுபாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. காட்டு தீ ஏற்படும் பட்சத்தில் விரைவாக அணைக்கும் பொருட்டு தீயணைப்புத்துறையினர் உதவியும் கோரப்படும். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டால் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. சட்டவிரோதமாக காப்பு காட்டிற்குள் செல்பவர்கள், குப்பைகள் வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வனத்தில் காட்டுத் தீ ஏற்படுத்துவது வனச்சட்டத்தின் படி கடுமையான குற்றமாகும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post நீலகிரி வன பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 100 கிமீ.,க்கு தடுப்பு கோடு appeared first on Dinakaran.