சென்னை: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் நிலவரி திட்ட பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் ஜென்மம் நிலஉடைமை முறை குறித்து வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு 1969ம் ஆண்டு ஜென்மம் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம்) சட்டத்தில் பிரிவு 17 நிலங்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் நிலவரி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு 1969ம் ஆண்டு ஜென்மம் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம்) சட்டத்தின் அடிப்படையில் குத்தகை காலம் முடிந்த 34,986.28 ஏக்கர் நிலங்களை மீட்கும் நடவடிக்கையை தொடரவும், மேற்கண்ட சட்டப்பிரிவு 17 நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், கூடலூர் ஜென்மம் நிலங்களில் தகுதியான குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட உள்ள தடையாணையை நீக்கும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவும், நீதிப்பேராணை மனு எண்.202/1995-ல் விவாதிக்கப்படும் வனப்பிரச்சனைகளில் இருந்து தமிழ்நாடு கூடலூர் ஜென்மம் நிலங்கள் சட்டம் 1969-ன் கீழ் வரும் வழக்குகளை பிரித்து தனியாக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, எம்பி ஆ.ராசா, தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் செந்தில்குமார், சட்டத் துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், நில நிர்வாக ஆணையர் பழனிச்சாமி, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதி, நீதிமன்ற வழக்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.