நீர்வரத்து அதிகரிப்பால் தென்கரைக்கோட்டை ஏரிக்கரையில் விரிசல்

2 months ago 12

* வாகன போக்குவரத்து நிறுத்தம்

* கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

கடத்தூர் : கடத்தூர் ஒன்றியம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பி கரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பெஞ்சல் புயல் மழையால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்த மழைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை 65.27 அடி கொள்ளளவு கொண்டதாகும். அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 63.30 அடியாக உள்ள நிலையில், கடந்த 1ம் தேதி விநாடிக்கு 3,750 கன அடி வீதமும், 3ம் தேதி 1,125 கன அடி வீதமும் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது, அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 375 கன அடியாக உள்ள நிலையில், அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

அணையில் உபரிநீர் திறப்பால் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, பறையப்பட்டி மற்றும் தென்கரைக்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தென்கரைக்கோட்டை ஏரிக்கரையில் சுமார் 200 மீ., அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏரி உடையும் அபாயம் உள்ளதாக தகவல் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, கடத்தூர் பி.டி.ஓ., கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஏரிப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஏரி கோடி பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு தடுப்பு கற்கள் உடைத்தெடுக்கப்பட்டது. இதனால், ஏரியில் ததும்பிய தண்ணீர் கல்லாற்றில் பெருக்கெடுத்துச் சென்றது.

மேலும், பாதுகாப்பு கருதி ஏரிக்கரையோரம் உள்ள டாஸ்மாக் கடை இழுத்து மூடப்பட்டது. கரையோரம் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. தென்கரைக்கோட்டை -ஏ.பள்ளிப்பட்டி சாலையிலும், கோபாலாபுரத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையிலும் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அங்கு, கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, வாணியாற்றில் இருந்து தண்ணீரை திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், ஏரிக்கரையில் முன்னெச்சரிக்கையாக 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post நீர்வரத்து அதிகரிப்பால் தென்கரைக்கோட்டை ஏரிக்கரையில் விரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article