திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம், நாசிக்

3 hours ago 1

ஜோதிர்லிங்க தரிசனம்

திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன்கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் பத்தாவது தலமாகும். இந்தியாவின் மிக நீளமான ஆறான குடாநாட்டு கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டடமாக உள்ளது.

இருப்பிடம்

இந்தக் கோயில் பிரம்மகிரி, நீலகிரி மற்றும் கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. திரியம்பகம் திருக்கோயில் அழகான கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் மேல் தளவரிசை முழுவதும் பல சிவலிங்க வடிவமுள்ள கற்கள் உள்ளன. விசாலமான பிரகாரம். சிவலிங்கம் ஆழத்தில் உள்ளது. அதில் மூன்று சிறு ரோஜா மொட்டு போன்ற உருவங்கள் மும்மூர்த்தி சொரூபமாக இங்கே காட்சியளிக்கின்றார். சிவலிங்கத்தின் அடியில் சதா நீர் எடுக்க எடுக்க ஊறிக் கொண்டே இருக்கிறது. கோயில் திருக்குளம் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது. இது 28மீ (92 அடி) 30மீ (98 அடி) அளவில் அமைந்துள்ளது. பில்வத்தீர்த்தம், விஸ்வநந்தீர்த்தம் மற்றும் முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.

கங்காதேவி, ஜாலேஸ்வரர், ராமேஸ்வரர், கௌதமேஸ்வரர், கேதார்நாதர், ராமர், கிருஷ்ணர், பரசுராமர் மற்றும் லட்சுமி நாராயணர் போன்ற பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. இந்த கோயிலில் பல மடங்களும் மகான்களின் சமாதிகளும் உள்ளன.

இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயர மலைமீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும், நான்கு வாயில்களைக் கொண்டும் உள்ளது. இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானா சாகிப் காலத்தில் கட்டப்பட்டது.

கோயிலின் கருவறையின்மேலே வாழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது. அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது. கோயிலின் பிரதான தெய்வமான திரிம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாகக் கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையார் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முக தங்கக் கவசம் அணிவிக்கப் படுகிறது.

திரிதேவாவின் (பிரம்மா விஷ்ணு சிவன்) தங்க முகமூடியின் மேல் வைக்கப்பட்டுள்ள நகைக் கிரீடத்தால் லிங்கங்கள் மூடப்பட்டுள்ளன. வைரம், மரகதம் மற்றும் பல விலையுயர்ந்த கற்களைக் கொண்ட இந்த கிரீடம் பாண்டவர்களின் காலத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

கிரீடம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 4-5 மணி வரை (சிவன்) தரிசனத்திற்காகக் காட்டப்படும். பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இக்கோயிலில் அமிர்தவர்ஷினி என்ற கிணறு உள்ளது. கோதாவரியின் ஆதாரமாக நம்பப்படும் குஷாவர்தா புனிதக் குளமும் உள்ளது.

திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் கதை

கௌதம ரிஷி தனது மனைவி அஹல்யாவுடன் பிரம்மகிரி மலையில் வாழ்ந்து வந்தார். பூமியில் எங்கும் பஞ்சம் நிலவியபோது, ​​ரிஷியின் ஆசிரமத்திற்குள், ஏராளமான உணவுத் தானியங்கள் இருந்தன. ஏனென்றால், அவருடைய உறுதியான பக்தியாலும், வழக்கமான பிரார்த்தனைகளாலும் தானியங்கள் குறையாமல் இருந்தன. அவருடைய வயல்களும் செழிப்பாக இருந்தது. மற்ற ரிஷிகள் அவர் மீது பொறாமை கொண்டு ஒரு பசுவை அவரது வயல்களுக்கு அனுப்பினார்கள். கௌதமர் தனது வயல்களில் இருந்து பசுவை பயமுறுத்த முயன்றபோது, ​​அது இறந்தது. ஒரு பசுவைக் கொன்ற பாவத்திற்காக, கங்கை நதியில் நீராட விரும்பினார். அதற்காக சிவபெருமானை வணங்கினார், அவரது பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், கங்கையைத் தனது ஜடா முடியில் இருந்து விடுவித்து அங்கேயே இருக்கச் சொன்னார். அதுவே ஒரு குளமாக இங்கே மாறியது. முனிவர் அதில் நீராடி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார். தற்போது இருக்கும் குஷாவர்தா என்ற புனிதக் குளம் தான் கோதாவரியின் ஆதாரமாக உள்ளது. (மக்கள் கோதாவரியை கங்கையாக வழிபடுகிறார்கள்) முனிவர் சிவபெருமானையும் இந்தத் தலத்தை தனது இருப்பிடமாக கொள்ளுமாறு வேண்டினார். இறைவன் அவர் வேண்டுதல் படி இங்கே ஓர் ஜோதிர்லிங்க வடிவில் தோன்றினார். அதுவே திரிம்பகேஷ்வர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது.

ஆலயம் திறக்கும் நேரம்: காலை 5:30 முதல் இரவு 9:00 மணி வரை. காலை 5:30 மணிக்கு மங்கள ஆரத்தி, இரவு 7:00 மணிக்கு மாலை ஆரத்தி. புகழ்பெற்ற புனித யாத்திரைத் திருவிழாவான கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும்.

எப்படிச் செல்வது?: திரிம்பகேஷ்வரிலிருந்து 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நாசிக் சாலை ரயில் நிலையம். இதுவே முக்கிய ரயில் நிலையம் ஆகும். ஸ்டேஷனில் இருந்து கோயிலுக்கு செல்ல டாக்சிகள் மற்றும் பேருந்துகள் உள்ளன. திரிம்பகேஷ்வர் ஆலயம் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மும்பை, புனே மற்றும் அவுரங்காபாத் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இருந்து திரிம்பகேஷ்வருக்கு வழக்கமான அரசு போக்குவரத்துப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாலை வழியாக பயணம் செய்தால் இயற்கை எழில் கொஞ்சும், பசுமையான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சிகளைக் காணலாம்.

The post திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம், நாசிக் appeared first on Dinakaran.

Read Entire Article