மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4105 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இருப்பினும் அங்குள்ள மெயினருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3619 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 4105 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 107.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 108.12 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 75.76 டிஎம்சியாக உள்ளது.
The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4105 கனஅடி appeared first on Dinakaran.