திருவாரூர் பூங்கோயில் வளாகத்தில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நான்கு முக்கிய கோயில்கள் அசலேஸ்வரம், ஆடகேஸ்வரம், அனந்தீஸ்வரம், சித்தீஸ்வரம் ஆகும். இதில் தென்கிழக்கு மூலையில் உள்ள அசலேசம் என்ற கோயிலே ஆரூர் அரநெறி எனப்படுகிறது. திருவாரூர்த் திருக்கோயிலான புற்றிடங்கொண்டாரது பூங்கோயில் போலவே ஆரூர் அரநெறிக் கோயிலும் மிகவும் தொன்மை வாய்ந்தது.
அர்த்தம் என்கிற தேசத்தின் சூரிய குல மரபில் வந்த சமற்காரன் என்னும் மன்னன் அசலேசரைத் ஸ்தாபித்தான் என்று திருவாரூர்த் தல புராணம் கூறுகிறது. இக்கோயிலின் அமைப்பைப் போலவே தஞ்சை பெரிய கோயில் அமைந்ததாகக் கூறுவர். இத்திருக்கோயில் நமிநந்தியடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோருடன் தொடர்புடையது.
திருவாரூர்க்கு அருகிலுள்ள ஏமப்பேறூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். ‘திருநீறே உண்மைப் பொருள்’ என்ற கொள்கையை உடையவராய் விளங்கினார். ஒரு நாள் ஏமப்பேறூரிலிருந்து திருவாரூர் சென்று வன்மீக நாதரை வணங்கித் திருமுன்றிலை அடைந்தார். அங்குப் பக்கத்தில் உள்ள அரநெறி கோயிலுக்குச் சென்றார். அப்போது மாலை நேரம்.
திருக்கோயிலில் விளக்கில்லை. எனவே, விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று நினைத்தார். வீட்டுக்குச் சென்று எண்ணெய் கொண்டு வருவதற்கு நேரமாகும் என்பதால் பக்கத்திலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றார். இறைவனுக்கு விளக்கேற்றுவதற்காக எண்ணெய் கேட்டார். ஆனால், அவ்வீட்டார் சமணசமயத்தவர். ஆதலால், ‘கையில் கனல் உடைய உங்கள் இறைவனுக்கு விளக்கு எதற்கு? எண்ணெய் இங்கு இல்லை. அப்படி விளக்கெரிக்க வேண்டும் என்றால் தண்ணீர் விட்டு விளக்கெரியச் செய்யும்’ என்று சொல்லி அனுப்பினர். அதனால் வருத்தமடைந்து நேரே கோயிலுக்குச் சென்று இறைவன் முன் விழுந்து பணிந்தார். அப்போது, ‘அன்பனே! வருந்தாதே! இக்கோயிலின் பக்கத்தில் உள்ள குளத்திலிருந்து நீரைக் கொண்டு வந்து விளக்கு ஏற்றுக’ என்றதோர் அசரீரி வாக்கு எழுந்தது.
‘‘வந்த கவலை மாற்றும் இனி மாறாவிளக்கு பணிமாற
இந்த மருங்கிய குளத்துநீர் முகந்து கொடு வந்தேற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலர்’’
சிவபெருமான் அருளால் எழுந்த சொல்லைக் கேட்டு (அசரீரி) நமிநந்தியடிகள் மனம் மகிழ்ந்து செய்வது அறியாமல் நின்றார். பின்னர் பெருமானின் அருளை எண்ணி, அவரது ஆணைப்படி, திருக்குளத்து நீரை முகந்து விளக்குகளில் இட்டு விளக்கேற்றினார். திருக்கோயில் முழுவதும் எங்கும் திருவிளக்குகள் ஏற்றினார். விடியும் வரை திருவிளக்குகள் அணையாமல் நின்று எரியும் பொருட்டு நீரை விளக்குகளில் வார்த்துக் கொண்டே இருந்தார்.
‘‘நிறையும் பரிசு திருவிளக்கு விடியு மளவும் நின்றெரியக்
குறையுந் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர்வார்த்து’’
இவ்வாறு நாளும் நீரால் திருவிளக்கேற்றும் பணியை பெருமான் அருளால் தொடர்ந்து செய்து வந்தார்.
‘‘ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திருவிளக்கிட்டமை நீணாடு அறியும் அன்றே’’
என்று நமிநந்தியடிகளைப் போற்றுகிறார் அப்பர் பெருமான்.
நமிநந்தியடிகள் நீரால் விளக்கேற்றும் காட்சிச் சிற்பம் தாராசுரம் திருக்கோயிலில் இடம் பெற்றுள்ளது. ‘‘இச்சிற்பக் காட்சியில் ஒருபுறம் திருக்கோயிலொன்று காணப்பெறுகிறது. அதன் முன்னர் ஒருவர் திருவிளக்குகளை ஏற்றுகின்றார். எதிரே உள்ள குளத்தில் அவரே குளத்து நீரைப் பாத்திரமொன்றில் முகந்து கொண்டிருக்கின்றார்’’ என்று குடவாயில் பாலசுப்ரமணியன் பதிவு செய்கிறார்.
கருங்குழி இல்லத்தில், வள்ளற் பெருமான் இரவில் பாடல்கள் எழுதுவது வழக்கம். அதற்காக அவ்வீட்டின் அம்மையார் முத்தியாலம்மாள் நாள்தோறும் விளக்கேற்றி வைப்பார். ஒருநாள் அடுத்த ஊருக்குச் செல்லும் அவசரத்தில் முத்தியாலம்மாள் எண்ணெய்ச் செப்பு ஓட்டையாய் இருந்ததால், ஒரு புதுப் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டார். வழக்கம் போல் வைக்கும் எண்ணெயை வைக்க மறந்துவிட்டார்.
வள்ளலார் எப்பொழுதும் போல் எழுதிக் கொண்டிருந்தார். அங்கு பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை எண்ணெய் என்று எண்ணி விளக்கில் விட்டுக் கொண்டே இருந்தார். இரவு முழுதும் விளக்கு எரிந்தது. மறுநாள் அவ்வம்மையார் திரும்பி வந்து பார்த்த போது தான்,தான் எண்ணெய் வைக்க மறந்து போனது நினைவிற்கு வந்தது. தண்ணீரால் வள்ளலார் விளக்கு ஏற்றினார் என்ற மகிமை புரிந்தது. திருவருட்பா நான்காம் திருமுறையில் அருள்நிலை விளக்கத்திற்குச் சான்றாக அமைந்த பாடலில் இச்செய்தியை தெரிவிக்கின்றார் வள்ளலார்:
‘‘மெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்கு
இல்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட்பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னநகர்
நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொரு தண்ணீர் விளக்கும்
எரிந்தது சந்நிதியின் முன்னே’’
திருவருளின் நல்விளக்கத்திற்குச் சான்று பகரும் இவ்வருள் பாட்டு சென்னையில் இருந்த இறுக்கம் இரத்தின முதலியாருக்கு வள்ளற்பெருமான் எழுதி விடுத்தது என்று உரைவேந்தர் ஔவை துரைசாமிப் பிள்ளை குறிப்பர்.
லெபனானில் பிறந்த யூசப் அன்டவுன் மக்லூஃப் (Youssef Antoun Makhlouf) செயின்ட் சர்பேல் (Saint Charbel) என்று போற்றப்பட்டவர். அவரின் புனித தன்மைக்காகவும், கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் மற்றும் அரபுமொழி பேசும் எஸோதெரிக் இனவழிக் குழுவினரான ட்ரூஸ் ஆகியோரை ஒன்றிணைத்து செயல்பட்டதற்காகவும் பரந்த நற்பெயரைப் பெற்றவர். ‘‘லெபனானின் அதிசயத் துறவி’’ (Miracle monk of Lebanon) என்று இன்று வரை அழைக்கப்படுகிறார்.
லெபனான் மலையில் உள்ள அன்னயா என்ற இடத்தில் இருக்கும் புனித மரோன் தேவாலயத்தில் (St.Maroun Monastery) பாதிரியாராக (துறவியாக) பணியாற்றி வந்தார். ஒருநாள் அவருடைய அறையில் இரவு படிப்பதற்காக தன்னுடன் இருக்கும் சகோதரரிடம் (இளந்துறவி) அறையில் உள்ள விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிவைக்கும்படி சொன்னார். அந்தச் சகோதரர் அவரை ஏளனம் செய்யும் வகையில், அந்த விளக்கில் தண்ணீர் நிரப்பி அவருடைய அறையில் வைத்துவிட்டுப் போனார்.
சர்பேல் அந்த விளக்கின் திரியை ஏற்றி, படிக்க ஆரம்பித்தார். விளக்கு சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் கழித்து சகோதரர் அந்த அறையைக் கடந்து சென்ற போது, இவர் தண்ணீர் ஊற்றிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அந்த இன்பமான அதிர்ச்சியை தேவாலயத்தின் தலைமைத் துறவியிடம் (Superior Monk) தான் செய்ததைச் சொல்லி அவரையும் சர்பேல் அறைக்கு கூட்டி வந்தார். அப்பொழுது எரிந்து கொண்டிருந்த விளக்கில், படித்துக் கொண்டிருந்த சர்பேலைப் பார்த்து, ‘இந்த சகோதரர் உங்கள் விளக்கில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார் என்பது தெரியுமா?’ என்று கேட்டார்.
‘இல்லை, அவர் அப்படிச் செய்தது எனக்குத் தெரியாது’ என்று சர்பேல் பதில் சொன்னார். தலைமைத் துறவி அந்த விளக்கினுள் இருந்த தண்ணீரை சுவைத்துப் பார்த்து அது தண்ணீர்தான் என்று உறுதி செய்தார். ‘கடவுள் தங்கள் மேல் வைத்த பேரன்பின் காரணமாக தங்களை ஆசீர்வதித்திருக்கிறார். தாங்களே தங்களின் சகதுறவிகளுக்கும், சகோதர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் மிக உயர்ந்த உதாரணமாக விளங்குகிறீர்கள்’’ என்று சர்பேலைப் புகழ்ந்தார் தலைமைத் துறவி. சர்பேல் மரோனைட் துறவியாக அவரது பக்தி மற்றும் ஒழுக்கத்தின் காரணமாக மற்ற துறவிகளுக்கும் முன் மாதிரியாகத் திகழ்ந்தவர். இதனால், அக்டோபர் 9, 1977 இல் ஆறாவது போப் பால் (Pope Paul VI) சர்பேலுக்கு கிறிஸ்துவத்தின் மிக உயர்ந்த புனித (Saint) பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்தினார்.
பகவான் சாயி பாபா சீரடியில் இரண்டு அறைகளின் அளவே இருக்கும் ஒரு பாழடைந்த மசூதியில் தான் வசித்து வந்தார். அவர் ஆரம்பத்தில் மக்களுடன் கலந்து பேசுவதில்லை. யாராவது கேள்வி கேட்டால் மட்டுமே அதற்கு பதில் கூறினார். பகற்பொழுதில் வேப்ப மரத்தடியிலும், கிராம எல்லையில் வாய்க்காலுக்கு அருகிலுள்ள ஆலமர நிழலிலும் அமர்ந்திருப்பார். மாலை நேரங்களில் அவர் குறிக்கோள் இன்றி நடப்பார். நீம்காவ் வரை பாபா சாஹேப் வீட்டுக்குச் செல்வார்.
அவரின் தம்பியான நானா சாஹேப்பிற்கு இரண்டாவது திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லை. பாபா ஆசீர்வாதம் செய்து நானாசாஹேப் ஒரு புதல்வனைப் பெற்றார். அதிலிருந்து பாபாவைப் பார்க்க மக்கள் கூட்டமாக வரத் தொடங்கினர். பகற்பொழுதில் மக்களை சந்தித்து விட்டு இரவில் பழைய மசூதியில் வந்து தங்கினார். அப்பொழுது பாபாவிடம் ஒரு தகரடப்பா (டம்ளர்), நீண்ட கஃப்னி, ஒரு சட்கா (தண்டம்) இவைகள் மட்டுமே இருந்தன. ஒரு சாக்குத் துணியே அவரது ஆசனமாகும். இரவில் மசூதியில் திசைக்கு ஒன்றாக நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். அவை இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். அந்த விளக்குகளுக்கான எண்ணெய்யை பக்கத்தில் இருக்கும் பல கடைகளில் இருந்து பெற்றுக் கொள்வார் பாபா. ஒருமுறை கடைக்காரர்கள் ஒன்று சேர்ந்து இனிமேல் பாபாவிற்கு எண்ணெய் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். வழக்கம்போல் பாபா அவர்களிடம் எண்ணெய் கேட்கப் போனபோது அவர்கள் அனைவரும் தீர்மானமாக எண்ணெய் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.
பாபா சிரித்துக் கொண்டே மசூதிக்குத் திரும்பி வந்தார். திரிகளை விளக்குகளில் இட்டார். கடைக்காரர்கள் மசூதிக்கு வந்து என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்தனர். எப்படி விளக்கேற்றுவார் என்று வேடிக்கை பார்த்தனர். பாபா எப்பொழுதும் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றினார், அந்நீரை அருந்தினார். பின்னர் மீண்டும் அக்குவளையில் நீரை நிரப்பி அதனை எல்லா விளக்குகளிலும் ஊற்றினார், திரியை ஏற்றினார். விளக்குகள் எரியத் தொடங்கின. இரவு முழுவதும் அந்த விளக்குகள் எரிந்தன. சீரடி மக்கள் அனைவரும் மசூதிக்கு வந்து தண்ணீரால் விளக்குகள் எரியும் அதிசயத்தைப் பார்த்தனர். கடைக்காரர்கள் தங்கள் செயலுக்கு வருந்தி பாபாவிடம் மன்னிப்பு கேட்டனர். பாபா அவர்களை நோக்கி, ‘எதிர்காலத்தில் உண்மையுள்ளவர்களாக இருங்கள்’ என்று கூறினார்.
‘‘இன்னவர் நினைவை அறிந்த பாபா
அங்கேற்றிடும் விளக்குகள் எடுத்து
முன்னம் வைத்து அவற்றினில் நிரம்ப நீர்வார்த்து முறையொடு திரிகளை முறுக்கித்
துன்னுநீர் பெய்த அகலினில் சேர்த்துச் சுடரினை பொருத்தினர் சோதி
மன்னிய பகல் போல் எங்கணும் பரந்து
மல்கி இருள் அகற்றியது அன்றே’’
(ஸ்ரீஸாயிபாபா புராணம்)
‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக’ இறைவனுக்கு இயற்கை விளக்கேற்றிய முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வார் அருளிச் செயலின் படி அருளாளர்கள் ஏற்றிய ‘‘நீர்நிமிர்சுடர்”, ஓர் அதிசயமான அற்புதமே. சாயி சரணம்.
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post நீர் நிமிர் சுடர் appeared first on Dinakaran.