கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்ணின் 9 விரல்கள் துண்டிப்பு: விசாரணைக்கு உத்தரவு

3 hours ago 2

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்ணின் கை மற்றும் கால்களில் 9 விரல்கள் நீக்க்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பத்மஜித். இவரது மனைவி நீது (31). கடந்த மாதம் வயிற்றில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை இவர் அணுகினார்.அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும் என்று அந்த மருத்துவமனை டாக்டர் கூறியுள்ளார். ஆனால் கட்டணம் அதிகமாக இருந்ததால் அதன் பின்னர் நீது அந்த மருத்துவமனைக்கு செல்லவில்லை.

சில நாட்கள் கழித்து நீதுவை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகிகள், ரூ. 3 லட்சத்திற்கு அறுவை சிகிச்சை செய்து தருவதாக கூறியுள்ளனர். அதற்கு நீதுவும் சம்மதித்துள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாளே நீது வீட்டுக்கு திரும்பினார். ஒருசில நாளில் நீதுவுக்கு வாந்தி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நீது வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவரது கை மற்றும் கால் விரல்கள் அழுகத்தொடங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து நீதுவின் கால் மற்றும் கைகளில் உள்ள 9 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் உடனடியாக நீக்கப்பட்டது. கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்னைதான் இதற்கு காரணம் என்று கூறி நீதுவின் கணவர் பத்மஜித் தும்பா போலீசில் புகார் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை மீது தும்பா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே மருத்துவமனையில் இதற்கு முன்பும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாக நீதுவின் கணவர் பத்மஜித் கூறினார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கேரள சுகாதாரத்துறை இயக்குனருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

The post கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்ணின் 9 விரல்கள் துண்டிப்பு: விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article