ராணுவத்தை தொட்டு ரணகளமாக கிடக்கும் தெர்மாகோல்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

4 hours ago 3

‘‘வழக்கமா கோமாளித்தனமா பேசினா ரசிக்கத் தானே செய்வாங்க.. இதென்ன திட்றாங்கன்னு.. முழிக்கிறாராமே தெர்மோகால்காரர்..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் இலைக் கட்சியின் மாஜியான தெர்மோகோல்காரர் தாமரையுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டோமென கூறி மேடைகள்தோறும் பேசி வந்தார். தாமரையோடு கட்சித் தலைமை சேர்ந்ததில், கொஞ்ச காலம் யாரும் கேள்வி கேட்பார்களோ என ஓடி ஒளிந்தவர், வேறு வழியற்றுப்போய் கட்சித்தலைமையை திருப்திப்படுத்த, கண்டபடி கண்மண் தெரியாமல் தாமரைக் கட்சி தலைமையை துதி பாடத் துவங்கியிருக்கிறார். அதன் உச்சத்தில், ‘ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க…? இல்லையே. தொழில்நுட்பம் அமைச்சு, கருவிகளை எல்லாம் வாங்கிக் கொடுத்தது ஒன்றிய அரசு, பாரத பிரதமர்தானே. இந்த ஆயுதங்களைக் கேட்டவங்க ராணுவ, உள்துறை அமைச்சருங்கதானே.. எந்தெந்த ஆயுதம் வாங்கணும், எதிரிகளை எப்படித் தாக்கலாம்னு . எல்லாத்தையும் அவங்கதானே உன்னிப்பாச் செஞ்சாங்க. முதல்ல பிரதமரைத்தான் பாராட்டணும். அதைவிட்டு விட்டு, ராணுவ வீரங்களுக்கு பாராட்டு ஊர்வலம் நடத்துறாங்களே..’ என்று ஒரு மனநலப்பாதிப்பாளராகவே பேட்டி தந்து அத்தனை பேரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிட்டார். பேட்டியெல்லாம் முடித்து வீட்டுக்கு போனப் பிறகு தான் சகல திசைகளில் இருந்தும் டோஸ் வந்து குவிந்திருக்கிறது. இலைக்கட்சி தலைமை முதல் அவரது கட்சி முக்கிய ஆட்களே லைனில் வந்து வறுத்ததெடுக்கிறார்கள். வேறு வழியின்றி தனது எக்ஸ் தளத்தில், ‘ராணுவ வீரர்களை மதிக்காமப் பேசல.. எங்க கட்சித்தலைவரே பாராட்டி இருக்காரு.. எங்க குடும்பமே முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டதுதான், நேற்று, இன்று, நாளை எப்போதும் மதிக்கிறேன்’னு தப்புந்தவறுமா ஒரு பதிவைப் போட்டுட்டு சமாளிக்கப் பார்த்துருக்கார். ‘தெர்மோகோல்ல ஆரம்பிச்சு ராணுவ வீரங்க வரைக்கும் எதையாவது பேசிட்டு, அப்புறம் சமாளிச்சுப் பேசுறதே இவரு வேலையாப் போச்சு.. உயிரைக் கொடுத்து போராடுற வீரங்களை அவமானப்படுத்துனதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்கணுங்க’ன்னு இலைக்கட்சித் தொண்டர்கள் பலருடன், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வர்ராங்க. எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருவதால், என்ன செய்வது என தெரியாமல் கிலியில் ஆடிப்போயுள்ளாராம் தெர்மோகால்காரர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சி மாவட்ட தலைவரை மாற்றக்கோரி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கிறதா பேச்சு அடிபடுதே.. என்னா விஷயம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் மலராத கட்சி மாவட்ட தலைவரை மாற்றக்கோரி 16 வட்டார தலைவர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம். இந்த மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிக்கு வடக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கோயிலில் உள்ளவரின் பெயரை கொண்டவர், வந்த ஒரு மாதத்திலேயே வட்டார அளவில் பொறுப்புகளுக்கு வசூல் வேட்டை நடத்தி உள்ளாராம். அதிலும் செஞ்சி தொகுதியில் வீட்டுக்கு தேவையான ஏசி உள்ளிட்ட பொருட்களையும் நன்கொடையாக நிர்வாகிகளிடம் பெற்று இருக்கிறாராம்.

புதுச்சேரியில் நிரந்தரமாக வசிக்கும் அவர், தமிழக பகுதிக்கு தலைவராக இருப்பதும், வட்டார தலைவர்களை கலந்தலோசிக்காமல் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புகளை போடுவதால் இந்த மாவட்டத்தில் உள்ள 22 தலைவர்களில் 16 வட்டார தலைவர்கள் தலைமையில் புகார் அளித்திருக்கிறார்களாம். ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்து இருக்கும் நிலையில் மாநில தலைமையோ நான் புதுசா இப்பதான் பதவிக்கு வந்திருக்கிறேன். எல்லாம் போகப்போக சரி செய்து விடுவதாக தெரிவித்து இருக்கிறாராம். இருப்பினும் இங்குள்ள நிர்வாகிகள் மாவட்ட தலைவரை மாற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று கொடிபிடித்து இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி மாஜி அமைச்சர்கள் இடையே பனிப்போரால் அதிருப்தியில் இருக்காங்களாமே நிர்வாகிகள்’’ என இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் சேலத்துக்காரர் அணியில் மாஜி அமைச்சர் மணியானவர் கடலோர மாவட்டத்திற்கு முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். தேனிக்காரர் அணியில் இருந்து வந்த மாஜி அமைச்சர், திடீரென அங்கிருந்து விலகி மீண்டும் இலைகட்சிக்கே திரும்பினார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்து வந்தது. சமீபகாலமாக இவர்களுக்குள் திரைமறைவில் இருந்து வந்த பனிப்போர் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததாம். கடலோர மாவட்டத்தில் நிர்வாகிகள் பலம் யாருக்கு அதிகம் இருக்கிறது என்பதை தலைமையிடம் நிரூபிக்கும் வகையில் தற்போது இரு தரப்பினரும் தங்களது பவரை காண்பித்து வருகிறார்களாம். மாவட்டத்தை பொறுத்தவரை தனது கை தான் ஓங்க வேண்டும் என அவர்களுக்குள் திரைமறைவில் அதற்கான சில வேலைகளில் இறங்கியிருக்காங்க. இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் மாஜி அமைச்சர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொடர் சர்ச்சையில் சிக்குவதால், குடும்பமும் உறவும் திகிலடைந்துள்ளதாமே..’’ என புதிராகக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் கிராமப்புற தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரவையில் நுழைந்தவர் அந்த ஜெயமானவர். இவரது குடும்பம் சர்ச்சையில் சிக்குவது ெதாடர்கதையாகி வருகிறது. சந்தன கட்டை விவகாரத்தை தொடர்ந்து மணல் சுரண்டல், மானியத்தில் கைவைப்பு என புற்றீசல்போல் புகார்கள் எழுந்து வருகின்றன. தற்போது புதிதாக போலி மதுஆலை இயங்க இடம்கொடுத்த சர்ச்சையிலும் இவர் சிக்கி உள்ளார். இருப்பினும் அடுத்தடுத்து எழுந்த புகார்களை சமாளித்து வீறுநடை போடுகிறாராம் அந்த ஜெயமானவர். காரணம் அரசியல் பின்புலம்தானாம். விசாரணை சுதந்திரமாக நடத்தப்பட அமைச்சரவையில் இருந்து ஜெயமானவரை விடுவிக்கணும் என்ற கோஷம் மீண்டும் வலுப்பட தொடங்கிவிட்டது. இதுதொடர்பான ஆதாரங்களுடன் ஒன்றியத்தின் பவர்புல் மாநில நிர்வாகிக்கும் புகார்கள் பறந்துள்ளதாம். எந்த நேரத்திலும் விசாரணை திசைமாறலாம் என்பதால் ஜெயமானவருக்கு நெருக்கமான உறவு வட்டாரங்கள் திக்திக் மனநிலையில் உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா

The post ராணுவத்தை தொட்டு ரணகளமாக கிடக்கும் தெர்மாகோல்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article