நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகர் சோனு சூட்டிற்கு கைது வாரண்ட்: லூதியானா கோர்ட் அதிரடி

2 hours ago 1

லூதியானா: பணமோசடி வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா என்பவர் லூதியானா நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மோஹித் சுக்லா என்ற நபரிடம் ரூ. 10 லட்சத்தை இழந்தேன். அவர் போலி ‘ரிஸ்கா’ நாணயங்களில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று கூறினார். இதுதொடர்பான விளம்பரங்களில் சோனு சூட் நடித்துள்ளார். அவரது விளம்பரத்தை பார்த்து மோஹித் சுக்லாவிடம் பணத்தை இழந்தேன்.

இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக சோனு சூட் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சோனு சூட்டுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராவில்லை. இந்நிலையில் லூதியானா நீதித்துறை நடுவர் ராமன்பிரீத் கவுர், நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வாரண்ட் மும்பையின் அந்தேரியின் ஓஷிவாரா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும் சோனு சூட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 

The post நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகர் சோனு சூட்டிற்கு கைது வாரண்ட்: லூதியானா கோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article